Sunday 17 July 2016

ரிலையன்ஸ் அதிகாரிகள் மிரட்டல் பொறியியல் மாணவர் தற்கொலை...

கல்விக்கடனை உடனே திரும்ப கட்டச்சொல்லி ரிலையன்ஸ் நிர்வாகம் மிரட்டியதால் மதுரையில் பொறியியல் மாணவர் கே.லெனின் (23 வயது) தற்கொலை செய்து கொண்டார்.மதுரை அனுப்பானடி ராஜீவ்காந்தி நகர் 4வது தெருவில் வசித்து வந்த கதிரேசன் மகன் லெனின் மதுரையில் உள்ள எம்.வி.எம்.எம். பொறியியல் கல்லூரியில் சிவில் என்ஜினியரிங் படித்து முடித்துள்ளார். தனது படிப்பிற்காக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் கல்வி கடன் ரூ.1.80 லட்சம் பெற்றிருந்தார். இக்கடனை திரும்பச் செலுத்தச் சொல்லி வங்கி நிர்வாகம் கடும் நெருக்கடியை கொடுத்து வந்தது.இந்நிலையில் படித்து முடித்து ஓராண்டாக பொறுத்தமான வேலை கிடைக்காமல் லெனின் பெரும் சிரமத்தை சந்தித்து வந்துள்ளார்.ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, நிர்வாகம் கல்விக் கடனை வசூலிக்கும் பொறுப்பை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டது. கல்விக்கடனை கட்டச் சொல்லி ரிலையன்ஸ் நிர்வாக அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியும், தொலைபேசி மூலமாகவும் தொடர்ந்து கடும் நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். கல்விக்கடனை திரும்பச் செலுத்தவில்லையென்றால் கல்வி சான்றுகள் முழுவதும் பறிமுதல் செய்யப்படும் என கடுமையாக மிரட்டியதாகத் தெரிகிறது.இதனால் மனமுடைந்து போன மாணவன் லெனின் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இதுகுறித்து கட்டிட தொழிலாளியான அவரது தந்தை கதிரேசன் கூறும்போது, வங்கிக்கடனை திரும்பச் செலுத்தாமல் ஏமாற்றப் பார்க்கிறீர்களா? குடும்பமே கம்பி எண்ண வேண்டி வரும் என்று ரிலையன்ஸ் நிர்வாக அதிகாரிகள் மிரட்டினர். எப்படியாவது என் பிள்ளையை வேலைக்கு அனுப்பி வங்கிக்கடனை கட்டுவதாக கூறினோம்.வேலைதேடி பொறுத்தமான வேலை கிடைக்காததால் மேலே கடன் வாங்கியாவது வெளிநாட்டுக்கு அனுப்ப திட்டமிட்டிருந்தேன்.இந்நிலையில் இரண்டு நாளைக்கு முன்பு ரிலையன்ஸ் அதிகாரிகள் கல்விக்கடனை கட்டவில்லையென்றால் கல்விச் சான்றிதழ்கள் முழுவதும் பறிமுதல் செய்யப்படும் என மிரட்டியுள்ளனர். இதில் மனமுடைந்த நிலையில் இருந்தான். நாங்கள் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார் என கதறினார். இதுகுறித்து மதுரை அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்திய நாட்டின் பெரு முதலாளிகளுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் பல லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை கடனாக வரி சலுகைகளாக அள்ளிக் கொடுக்கும் அரசு, உயர்கல்வி பயில கொடுத்த கல்விக் கடனை திருப்பிச் செலுத்த உரிய கால அவகாசத்தை கூட அளிக்காமல் பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகின்றது.படித்து முடித்த மாணவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பு உறுதிப்படுத்தப்படும் போதே கல்விக்கடனை திரும்பச் செலுத்த முடியும். வேலை வாய்ப்புகளை உருவாக்கி தராமல், கல்வி கடனை உடனடியாக கட்டச் சொல்லி நிர்ப்பந்தம் செய்வது, மோசமான சமூக விளைவுகளையே ஏற்படுத்தும்.

No comments: